கோவையில் மகாசங்கரா மினி ஹாலில் அனுஷ தின சொற்பொழிவை முடித்து விட்டு நேற்று மதியம் இண்டிகோ விமானத்தில் சென்னை திரும்பினேன். Uber டாக்சியில் வீடு திரும்புவதற்கு பேட்டரி காரில் பார்க்கிங் இடத்துக்கு வந்தேன். இரண்டாவது தளத்தில்தான் Uber, Red Taxi எல்லாம். ஆனால், ஏதோ ஒரு நினைவில் நான்காவது தளத்துக்குப் போய் விட்டேன். அங்கிருந்தபடி Uber புக் செய்தேன். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் Uber டிரைவர் போன் செய்து 'எங்கே இருக்கீங்க சார்?' என்று கேட்டார். நான்காவது தளம் என்று சொன்னேன். 'சார்... அங்கிருந்து இரண்டாவது தளம் வந்து விடுங்கள்' என்றார். லிஃப்ட்டுக்குப் போகலாம் என்று நகர முற்பட்டபோது ஒரு டிராவல்ஸ் கார் வேகமாக வந்தது. சற்றே நகர்ந்து வழி விட்டேன். நான் நின்று கொண்டிருந்த இடத்தில் நின்றது. இங்குதான் ஒரு கார் பார்க் செய்வதற்கு உண்டான இடம் இருக்கிறது. இந்தத் தளத்தில் உள்ள மற்ற பார்க்கிங் இடம் எல்லாம் ஃபுல். இது பார்க்கிங் இடம் என்பது தெரியாமல் அந்த இடத்தை மறித்தபடி நின்று கொண்டு இருந்திருக்கிறேன்.. காரை பார்க் செய்த அந்த டிரைவர் வேகமாக இறங்கி என்னிடம் வந்தார். 'கார் நிறுத்துகிற இடத்தை மறித்தபடி நிக்கறீங்களே...' என்று சண்டை போட வருகிறார் என்றுதான் நினைத்தேன். ஆள் வேறு தாட்டியாக இருந்தார். இவர் என்ன கேட்கப் போகிறாரோ... இரண்டாவது தளத்தில் நாம் பயணிக்க வேண்டிய Uber டிரைவர் வேறு வந்து விட்டார்... என்ன செய்வது என்று ஒரே குழப்பம். அருகே வந்தார் டிரைவர். முகத்தில் கோபம் இல்லை. மலர்ச்சி. புன்னகை. 'சார்... மகா பெரியவாளைப் பத்தி பேசுற சுவாமிநாதன் சார்தானே நீங்க?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார். நல்ல வேளை... சண்டைக்கு வரவில்லை. 'ஆமாம் சார்' என்றேன் ஆச்சரியத்துடன். பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பர்ஸ் எடுத்து அதில் இருந்து மகா பெரியவா புகைப்படம் ஒன்றை எடுத்துக் காண்பித்தார். பிறகு மொபைலில் இருந்து அடியேனது யூ டியூப் பைல்களை ஒன்றிரண்டு ஓப்பன் செய்து காண்பித்தார். 'உங்க சொற்பொழிவை தினமும் கேட்பேன் சார். இன்னிக்கு உங்களைப் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை' என்று பூரிப்பானார். 'என் சொந்த ஊர் விழுப்புரம்தான் சார். மகா பெரியவா பொறந்த இடம்' என்றவர், 'சார்... உங்ககூட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?' என்று கேட்டவர் அருகில் இருந்த ஒரு பெண்மணியை விட்டு எடுக்கச் சொன்னார். இரண்டாவது தளம் போக வேண்டிய நான் எதற்கு நான்காம் தளம் வந்தேன்? நான்காவது தளத்தில் அன்று நான் நிற்கிற இடத்தில் மட்டும் ஒரே ஒரு பார்க்கிங் ஸ்பேஸ் எப்படி இருந்தது? ரசிகர்கள் பல விதம். ஒவ்வொருவரும் ஒரு விதம். இரண்டாம் தளம் வரை அவரும் என்னுடன் லிஃப்ட்டில் வந்து வழி அனுப்பி வைத்தார். சொல்ல மறந்துட்டேனே... அந்த டிரைவர் பெயர் - தணிகைவேல். பெரியவா சரணம்.

அன்புடன்,

பி. சுவாமிநாதன்