நேற்று (23.11.25 ஞாயிறு) என் மனைவி செல்லாவுடன் காஞ்சிபுரம் சென்றேன். பெரியவா பிருந்தாவன தரிசனம், ஓரிக்கை மணிமண்டப தரிசனம் முடித்து சென்னை திரும்பினேன். அடிக்கடி பயணிக்கும் டிராவல்ஸில் இருந்துதான் கார் வந்திருந்தது. வண்டி ஓட்டுநர் குணசேகரன். அடிக்கடி வருவார். இவரும் கோயில், குளம் நிறைய செல்வார். இவர் வரும்போது தான் சென்று வந்த கோயில்கள் பற்றிப் பேசுவார். அந்த வகையில் திருப்போரூர் முருகனில் (இவருக்கு குலதெய்வம்) ஆரம்பித்துப் பேச ஆரம்பித்தார். தாம்பரம் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது சோளிங்கர் நரசிம்மர் ஆலயம் பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது அவரிடம் நான் சொன்னேன்... ‘இதுவரை நான் சோளிங்கர் போனதில்லை. இத்தனைக்கும் நான் சுவாதி நட்சத்திரம். நரசிம்மரைத்தான் நான் அதிகம் தரிசிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், ஏனோ என்னால் சோளிங்கருக்குச் செல்லவே முடியவில்லை’ என்றேன். அதற்கு குணசேகரன், ‘சார்... இந்தக் கார்த்திகை மாதம் சோளிங்கர் நரசிம்மர் ரொம்ப விசேஷம். இந்த மாதம் மட்டும் நரசிம்மர் கண் விழித்துப் பக்தர்களைப் பார்ப்பதாகச் சொல்வார்கள். எனவே, கார்த்திகை மாதத்தில் சோளிங்கர் நரசிம்மரைத் தரிசிக்கப் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள்’ என்றார். ‘சரி... எனக்கு எப்போது கொடுப்பினை இருக்கோ, தெரியவில்லை நரசிம்மர் அனுக்ரஹம் கிடைப்பதற்கு’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். நேற்று மாலையில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு. சொற்பொழிவு முடிந்ததும், சில பக்தர்கள் வந்து தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்தனர். இது வழக்கம்போல் நிகழக் கூடிய ஒன்று! அவர்களுள் ஒரு அன்பர் - இளைஞர். ஐடியில் இருக்கிறார். எம்.ஆர்.எஃப்.பில் உத்தியோகம். சொந்த ஊர் காரைக்கால். என்னிடம் வந்தவர் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார். அதன் பின் தன் பையில் இருந்து சந்தனம் எடுத்து என்னிடம் நீட்டினார். ‘சார்... இன்னிக்குக் காலைல சோளிங்கர் நரசிம்மர் தரிசனத்துக்காகச் சென்றிருந்தேன். இந்த ஒரு மாசம் மட்டும் சோளிங்கர் நரசிம்மர் கண்களைத் திறந்து பக்தர்களைப் பார்ப்பதாக ஐதீகம். அங்கே நரசிம்மருக்கு சாற்றிய சந்தனம் இது. பிரசாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீட்டினாரே பார்க்கணும்! எது கிடைக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ, அது நிச்சயம் கிடைத்தே தீரும். பெரியவா சரணம்.

அன்புடன்,

பி. சுவாமிநாதன்